சென்னை:
ஹோலி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வட மாநிலத்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையிலும் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சவுகார்பேட்டை, வேப்பேரி, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் களை கட்டுவது வழக்கம்.
அந்த வகையில் ஹோலி பண்டிகை தினமான இன்று சென்னையில் ஹோலி கொண்டாட்டங்கள் உற்சாகமாக களை கட்டி காணப்பட்டது. வட மாநிலத்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று திரண்டனர். அப்போது கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவினார்கள்.
இந்த கொண்டாட்டத்தின்போது தங்களது நண்பர்கள், உறவினர்கள் பலரையும் வீட்டுக்கு அழைத்திருந்த வட மாநிலத்தவர்கள் அவர்களை வரவேற்கும் விதமாக முதலில் முகத்தில் லேசாக வண்ணப்பொடிகளை பூசினர்.
பின்னர் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவியும், கலர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் இந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி காணப்பட்டது. வேப்பேரி, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், துறைமுகம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் ஹோலி கொண்டாட்டங்கள் ஆட்டம்-பாட்டத்துடன் களை கட்டி இருந்தது.
பல இடங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் பாடல்களை ஒலிக்க விட்டு இளைஞர்களும், இளம்பெண்களும் நடனம் ஆடியதையும் காண முடிந்தது.
அதே நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் வயது வித்தியாசமின்றி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்படி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் பலர் வண்ணமயமான ஆடைகளுடன் மோட்டார்சைக்கிளில் சாலைகளில் வலம் வந்ததையும் காண முடிந்தது. அப்போது வாலிபர்கள் உற்சாகத்தோடு ‘ஹேப்பி ஹோலி’ என குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது சாலைகளில் சென்ற பொதுமக்களுக்கும் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
‘ஹோலிகா’ என்கிற அரக்கி தீயில் அழிந்த புராண கதையை நினைவூட்டும் வகையிலும், கோடைக்காலத்தை வரவேற்கும் விதத்திலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.