ஹோலி பண்டிகை
இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். வசந்தகாலத் திருவிழா என்று அழைக்கப்படும் இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் இங்கிலாந்து, அமெரிக்கா, பிஜி போன்ற இந்திய மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் இப்பண்டிகை விரிவாகக் கொண்டாடப்படுகின்றது.
ஹோலி
பண்டிகையின் போது, மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையன்று தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என மக்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், வழக்கமான உற்சாகமின்றி மக்கள் வீடுகளிலேயே ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். தற்போது நோய் தொற்று குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், மும்பை, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
சென்னை, சவுக்கார்ப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட வடமாநிலத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவு பொருட்கள், தேங்காய் உள்ளிட்டவற்றை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனை தொடர்ந்து, ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும், முகத்தில் கலர் பொடிகளை தூவியும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதில், தமிழர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் மத பாகுபாடு இன்றி கலந்து கொண்டனர்.
ஹோலி பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு
பிரதமர் மோடி
வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பரஸ்பர அன்பு, சகோதரத்துவம் மற்றும் அனைத்து வண்ணத்திலான மகிழ்ச்சியையும் உங்கள் வாழ்வில் கொண்டுவரும்.” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத்தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டவர்களும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
“நாட்டு மக்கள் அனைவருக்கம் வண்ணமயமான ஹோலி நல்வாழ்த்துக்கள். பலவகை வண்ணங்கள் இந்தியாவின் பன்முகத் தன்மையின் அடையாளம். இந்த வண்ணங்களின் திருவிழா அனைவரது வாழ்விலும் புதிய உற்சாகத் தையும் ஆற்றலையும் பெருக்கட்டும். அன்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம் தழைத்து வாழ்வில் வசந்தங்கள் சிறக்க எனது இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள்.” என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.