முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வாசிக்க தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்க்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மற்றும் அதிமுகவினர் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ் பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதை கண்டித்த அதிமுகவினர், அது குறித்து அவையில் பேச அனுமதி கேட்கப்பட்டு அமளியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
“சட்டமன்றத்தின் மரபை அதிமுகவினர் காக்க வேண்டும். சட்டப் பேரவைத் தலைவர் எழுந்து நின்றால் நீங்கள் உட்கார வேண்டும். இன்று நிதிநிலை அறிக்கை மட்டும் படிக்கப்படும் என்பது முதலமைச்சராக இருந்த உங்களுக்கு தெரியும். நீங்க இருவரும் முதலமைச்சராக இருந்தவர்கள் இது தெரிந்தே பேச வேண்டும் என சத்தம் போடுகிறீர்கள்” என எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோரிடம் சபாநாயகர் பதில் அளித்தார்.
பட்ஜெட் உரை முடிந்ததும் பேச வாய்ப்பு தருவதாக சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார். “நீங்கள் பேசுவது அவைக்குறிப்பில் இடம் பெறாது” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து பட்ஜெட் உரையை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.