வாஷிங்டன் : அமெரிக்க குடியேற்ற சட்டத்தின் கீழ், அந்நாட்டில் இருந்து கட்டாயமாக வெளியேறும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியேற்ற சட்டப்படி அந்நாட்டில் பணியாற்றி வரும் வெளிநாட்டினரின் குழந்தைகள், 21 வயதானவுடன் சட்டபூர்வமாக தங்கும் உரிமையை இழந்து விடுகின்றனர். அவர்கள் ஆவணமில்லாமல் குடியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்; நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இப்பிரச்னை குறித்து அமெரிக்க குடியேற்றத்திற்கான செனட் துணைக் குழு முன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல்யா ராஜகுமார் ஆஜராகி பேசியதாவது:
அமெரிக்காவுக்கு பெற்றோருடன் 4 வயதில் வந்தேன். தற்போது, 23 வயதாகிறது. அடுத்த எட்டு மாதங்களில் நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடியில் உள்ளேன். அதற்குள் என்னைப் போல் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானேருக்கு நீதி கிடைக்கவும், சட்டபூர்வ பாதுகாப்பிற்கும் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையெனில் நான் நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்படுவேன். 20 ஆண்டுகளாக வாழ்ந்த அமெரிக்க நாட்டை மட்டுமின்றி, என் பெற்றோரையும் பிரியும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமெரிக்காவில், அதுல்யா ராஜகுமார் போல குடியேற்ற ஆவணமின்றி, 1.10 கோடி பேர் உள்ளனர். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
Advertisement