புதுடெல்லி: போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகளில் கல்வியைதொடர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான கட்டணத்தையும் அரசு ஏற்கும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ரஷ்யா தொடுத்த போரால் உக்ரைனில் பயின்று வந்த 19,000 இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வந்தது. அவ்வாறு நாடு திரும்பியவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் கல்வி பயின்ற மாணவர்கள், பாதியில் நாடு திரும்பி உள்ளனர். அதனால், தங்கள் கல்வியை இந்தியாவிலேயே தொடர வாய்ப்பளிக்கும்படி மாணவர்கள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கோரிக்கையை நாட்டிலேயே முதல்மாநிலமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏற்றுக் கொண்டுள்ளார். உக்ரைனில் இருந்துகல்வியை பாதியில்விட்டுவிட்டு வந்த மாணவர்களுக்காக தேசியமருத்துவக் கவுன்சிலிடம் (என்எம்சி) அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்வதாக அவர் அறிவித்தார்.
தற்போது 2-வது மாநிலமாக மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியும் உக்ரைன் மாணவர்களின் கல்விக்கு உதவ முன்வந்துள்ளார். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள், மேற்குவங்க மாநிலத்தில் படிப்பை தொடரவும், அதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் மம்தா அறிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநிலத்திற்கு மொத்தம்391 மாணவர்கள் திரும்பியுள்ளனர். இவர்களில் பொறியியல் பயில்பவர்கள் குறைவாகவும், மருத்துவ மாணவர்கள் அதிகமாகவும் உள்ளனர். இவர்களில் 2-ம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரையிலான கல்வியை தொடர மேற்குவங்க மாநிலத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இங்குள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று முதல்வர் மம்தா அரசு அறிவித்துள்ளது.
இதற்காக என்எம்சி.யின் டெல்லி தலைமையகத்திடம் மம்தா அரசு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. என்எம்சி ஒப்புதலுக்கு பின் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அந்த மாணவர்கள் தங்கள் கல்வியை தொடரும் வாய்ப்புகள் உருவாகும். அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கட்டணத்தை மாநில அரசே ஏற்க உள்ளது. ஆனால், தனியார் கல்லூரிகளில் கட்டணங்கள் அதிகம் என்பதால், அதில் பாதியை மட்டும் அரசு ஏற்கும். மீதம் உள்ள பாதி தொகையை, அந்த தனியார் கல்லூரிகளுக்கு சிஎஸ்ஆர் தொகை எனப்படும் பெருநிறுவன சமூக நன்கொடையில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் தனியார் கல்லூரிகளில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கான இடங்கள் மாநில அரசுக்கானது. இந்த இடங்களில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட உள்ளது. இந்நிலையில், என்எம்சி.யின் ஒப்புதலை பெற பாதிக்கப்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜிவிரைவில் டெல்லி செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைனில் பயின்ற இந்திய மாணவர்களில், தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகமாக சுமார் 4,500 எண்ணிக்கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.