சென்னை: தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு ரூ.7000 கோடி குறைய உள்ளது, 2014-ல் இருந்து வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது, இந்த ஆண்டு அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கி வைத்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று காலை 10 மணி முதல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதனை தாக்கல் செய்து வருகிறது. அவரது பட்ஜடெ் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை நான் தாக்கல் செய்தபோது பல்வேறு புதிய திட்டங்கள், அறிவிப்புகள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த மனநிறைவுடன் நான் எனது இரண்டாவது வரவு‑செலவுத் திட்ட மதிப்பீடுகளை இந்த அவையின் முன்வைக்கின்றேன்.
கடந்த மே மாதத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை நாங்கள் நிதி மேலாண்மையில் அடைந்துள்ள சாதனைகள் அனைத்துமே அவரது வழிகாட்டுதலாலும், முழு ஆதரவினாலும் மட்டுமே எய்தப்பட்டவையாகும். இந்த வரவு‑செலவுத் திட்டத்தைத் தொடங்கும்போது, “இன்றைய சூழல்களை மட்டும் கருத்திற்கொள்ளாமல் தமிழ்நாட்டின் வருங்கால சந்ததியினரின் நலத்தையும் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும்” என்று முதல்வர் அறிவுறுத்தினார். அதை மனத்தில் கொண்டு இந்த வரவு‑செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்தனர். கோவிட் பெருந்தொற்றின் முதல் அலை பரவலைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக வீரியத்துடன் இரண்டாம் அலை பரவியிருந்த நேரத்தில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றோம். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளிலேயே ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார்.
அதனைத் தொடர்ந்து மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு தொலைநோக்குத் திட்டத்தையும் வகுத்துள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு, வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இவை மட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற வரவு‑செலவுத் திட்ட சட்டமன்றக் கூட்டத் தொடரில் பல முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
எதிர்பாராமல் பெருமளவில் செலவினங்கள் ஏற்பட்ட போதிலும், சிறந்த நிதி நிர்வாகத்தையும் நிதி மேலாண்மையையும் அரசு கடைப்பிடித்தது. இதன் பயனாக, மொத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வெறும் ஒரு சதவீதம் உயர்வினையே முதல் துணைநிலை மதிப்பீடுகளில் கோரினோம்.
2014 ஆம் ஆண்டு முதல்,வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. முதன்முறையாக இந்த ஆண்டு இந்த நிலை மாற்றப்பட்டு, 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. மேலும் இந்த சவாலான ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது. இந்த அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளும் நிர்வாகத் திறனுமே இதனை சாத்தியமாக்கியுள்ளது.
இந்த உறுதியான நடவடிக்கைகளின் அடித்தளமாக இருப்பவர் திராவிட மாதிரி வளர்ச்சியின் (Dravidian Model) இலக்கணமாகத் திகழ்பவர் முதல்வர் ஸ்டாலின். அவரின் ஒவ்வொரு சிந்தனையிலும், செயலிலும், சுயமரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிடக் கொள்கைகள் நிறைந்திருக்கின்றன.
திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளே இந்த அரசின் ஆணிவேராகும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிந்தனைகளும், செயல்களும், எழுத்துக்களும் இந்த அரசை சிறப்பாக வழிநடத்தி வருகின்றன. திராவிட இயக்கம் சமூகநீதிக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள் பல புரிந்த போதிலும், இப்போராட்டத்தில் நாம் இன்னும் முழுமையாக வெற்றி அடையவில்லை. எனவே, அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற நமது கொள்கையில் நாம் தொடர்ந்து உறுதியாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.