கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூர் கிராமத்தில் இயங்கி வருகிறது அரசு உயர்நிலைப்பள்ளி. அங்கு ஆங்கில பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த கண்ணன். அந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களின் குடும்பச் சூழலையும், கிராமத்துப் பிண்ணனியையும் உணர்ந்துகொண்ட ஆசிரியர் ஆனந்த கண்ணன், அவர்களுடன் அன்பாக பழகியிருக்கிறார். மேலும் தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே ஆங்கிலத்தில் பேச முடியும், எழுத முடியும் என்ற நிலையை மாற்றி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி முறையில் ஆங்கிலத்தை எளிமையாக கற்றுக்கொடுத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு தயக்கம் காட்டிய மாணவர்கள் ஆசிரியர் ஆனந்த மோகன் கொடுத்த தன்னம்பிக்கையில், ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தொடங்கினர். இந்நிலையில் ஆனந்த கண்ணனுக்கு நேற்று முன் தினம் பணி மாறுதல் ஆணை வந்தது. அதனால் அங்கிருந்து வேறு பள்ளிக்கு செல்வதற்கு அவர் தயாரானார். அதை தெரிந்துகொண்ட மாணவ, மாணவியர்கள் அவரை சூழ்ந்துகொண்டு, “எங்களை விட்டு போகாதீங்க சார்…!” என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். ஆனந்த கண்ணன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் மாணவர்கள் அவரை விடவில்லை.
தகவலறிந்து அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, “ஆசிரியர் ஆனந்த கண்ணன் பணியிட மாறுதலில் செல்கிறார். அரசின் உத்தரவை தடுக்க முடியாது. தவிர உங்களைப் போல மற்ற பள்ளியின் மாணவர்களும் அவரால் பயன்பெற வேண்டும். அதனால் அவர் போவதற்கு அனுமதியுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர். அதேபோல ஆசிரியர் ஆனந்த கண்ணனும் அவர்களுக்கு பொறுமையாக எடுத்துக் கூறினார்.
அதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் ஆசிரியர் ஆனந்த கண்ணன் கற்றுக்கொடுத்த ஆங்கிலப் பாடலைப் பாடி கண்ணீருடன் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பள்ளியை மட்டுமல்லாமல் அந்த கிராமத்தையே நெகிழ வைத்திருக்கிறது. வடதொரசலூர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2017 முதல் பணிபுரிந்து வரும் ஆனந்த கண்ணன் தமிழக அரசின் ’கனவு ஆசிரியர் விருது’ மற்றும் ’டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது’ போன்ற விருதுகளை வாங்கியிருக்கிறார்.