சென்னையில் சவுகார்பேட்டை புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வட இந்தியர்கள் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக வட இந்திய மக்களால் மார்ச் மாதம் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் நேற்று தொடங்கிய ஹோலி பண்டிகையில் மக்கள் வண்ண பொடி தூரிகைகள் கொண்டு ஒருவர் மீது ஒருவர் தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வருடாவருடம் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் சென்னை நகரில் இந்த வருடம் சௌகார்பேட்டை, புரசைவாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணப் பொடிகளை வாங்க பொதுமக்கள் நேற்றிலிருந்தே ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இன்று காலை சமண, இந்துக் கோயில்களில் வழிபாடு நடத்திய பின்னர் பலர் வண்ணப் பொடிகளை மாறி மாறி தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்கள் குறைவாக நடைபெற்ற நிலையில் இந்த வருடம் அதிகப்படியான மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மேலும் சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் பலர் சௌகார்பேட்டை பகுதிகளில் காலையில் இருந்தே புகைப்படங்கள் எடுப்பதற்காக அதிக அளவில் வருகை தந்துள்ளனர். வண்ண பொடிகளின் விற்பனையால் பிராட்வே பகுதியில் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM