வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கியுள்ள போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை முடிவை எடுத்துள்ளது.
ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்களான ஜோவில் சன், ரோ கண்ணா ஆகியோர் தலைமையிலான குழுவினர் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்துவை சந்தித்து பேசினர்.
அப்போது உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய அதிபர் புதினுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும் புதினுக்கு எதிராக இந்தியா பேச வேண்டும்.
இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி உக்ரைன்-ரஷியா இடையே அமைதி திரும்ப முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஜோவில்சன் எம்.பி. கூறும்போது, உக்ரைனில் ரஷியஅதிபர் புதின் செய்யும் அட்டூழியங்களுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பது முக்கியமானதாகும்“ என்றார்.
ரஷியாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் கடந்த இரண்டு நாட்களில் 2-வது முறையாக வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்தை அமெரிக்க எம்.பி.க்கள் டெட் லீயூ, டாம் மாலினோவ்ஸ்கி ஏற்கனவே வலியுறுத்தினர்.