தமிழக பட்ஜெட் 2022-23 | 7.5% ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணங்களுக்காக ரூ.204 கோடி ஒதுக்கீடு 

சென்னை: முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் 2022-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, உயர்கல்வித் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > தமிழகத்தில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் பார்வையாகும்.

> உலகளாவிய பங்களிப்புடன், “அறிவு சார் நகரம்” (Knowledge City) ஒன்று உருவாக்கப்படும். இந்த அறிவு சார் நகரம், உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும். இந்நகரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், திறன் பயிற்சி மையங்கள், அறிவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும்.

மேலும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) போன்ற அரசுபொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும்.

> தமிழகத்தின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துகொண்டே வருகிறது. அதற்கேற்ப, அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். இதற்காக, இவ்வாண்டு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

> முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.