சியோல்,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில், தென்கொரியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரத்திற்கு முன், ஒமைக்ரான் அலையானது, அந்நாட்டில் நாளொன்றுக்கு 1.4 லட்சம் முதல் 2.7 லட்சம் வரை பதிவாக கூடும் என கணிக்கப்பட்டு இருந்தது.
எனினும், நாள்தோறும் பதிவாகும் எண்ணிக்கை, இதனை கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு கழகம் கூறும்போது, அதிக தொற்றும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கொரோனா அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சுகாதார அதிகாரிகள் கணித்ததற்கும் கூடுதலாக அதிக அளவில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது என தெரிவித்து உள்ளது. அந்நாட்டில் நேற்று (வியாழ கிழமை) நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் 6,21,328 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகின. 429 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் 86.6% மக்கள் முழு அளவில் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தென்கொரியாவில் நேற்றிரவு வரையில், அதற்கு 24 மணிநேரத்திற்கு முன் ஒப்பிடும்போது, 4,07,017 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால் மொத்த எண்ணிக்கை 86 லட்சத்து 57 ஆயிரத்து 609 ஆக உயர்ந்து உள்ளது என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர்.
இவற்றில் சியோல் நகரவாசிகளில் 81,997 பேருக்கும், கியாங்கி மாகாணத்தில் 1,13,673 பேருக்கும், மேற்கு துறைமுக நகரான இன்சியானில் 25,797 பேருக்கும் புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.