கர்நாடக அரசு பள்ளிகளில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்த திட்டம் – மாநில கல்வித்துறை மந்திரி தகவல்

பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகவத் கீதை குறித்த பாடங்களை கற்பிக்க திட்டமிட்டுள்ளதாக கர்நாடக மாநில கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் நீதி வகுப்புகள் நடத்தும் நடைமுறை சில காலமாக பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் அவற்றை மீண்டும் தொடங்க பெற்றோர்கள் பலர் விரும்புவதாகவும் தெரிவித்தார். 

மாணவர்களுக்கு நற்சிந்தனைகளை வழங்கும் வகையில் பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பாடத்திட்டத்தில் வைப்பது குறித்து கல்வி நிபுணர்களுடன் கருத்து கேட்கப்படும் என்றும், அதன் பிறகு முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தி இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதே சமயம் நடப்பு கல்வி ஆண்டில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்றும் அடுத்த கல்வி ஆண்டு முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குஜராத் மாநில அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கட்டாய ஆங்கில பாடமும், 6 ஆம் வகுப்பு முதல் பகவத் கீதை பாடமும் அறிமுகப்படுத்தப்படும் என அம்மாநில கல்வித்துறை மந்திரி ஜித்து வகானி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.