புதுடெல்லி,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அதிலும் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இதனால் காங்கிரஸ் தலைமை குறித்து அக்கட்சியினரிடையே அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் கட்சியை மறுசீரமைக்க கட்சியின் அமைப்பு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதன் பிறகு நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
“சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டுமே பொறுப்பேற்க முடியாது. பல காங்கிரஸ் தலைவர்களை போலவே சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி, பிரியங்கா பதவி விலக முன் வந்தனர்.
ஆனால் இதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஏற்கவில்லை. இப்போது நமது விருப்பம் என்ன? புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை நாம் விரைவுபடுத்த வேண்டும். ஆனால் அது நடக்கக் கூடியது ஆகஸ்டு மாதம்தான். அதுவரை சோனியா காந்தி தலைமை தாங்குவார் என நாங்கள் நம்புகிறோம்.
நான் கோவாவின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது போல் மற்றவர்கள் மற்ற மாநிலங்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். பொறுப்பில் இருந்து யாரும் விலகவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை பதவியில் இருக்கும் எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. தலைமை மட்டும் பொறுப்பு என்று சொன்னால் மட்டுமே போதாது. கட்சி பிளவுபடாது என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.