பல்லாரி மாவட்டத்திற்கு ஆந்திரா தண்ணீர்! | Dinamalar

பெங்களூரு-”ஆந்திராவிலிருந்து கர்நாடகாவுடன் இணைக்கப்பட்ட பல்லாரி மாவட்டத்துக்கு, அதன் பங்கு நீரையும் பெறுவது தொடர்பாக அரசு பரிசீலிக்கிறது,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.சட்ட மேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:அமைச்சர் கோவிந்த் கார்ஜோள்: துங்கபத்ரா அணைக்கு, நவிலே அருகில் அணை கட்ட, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 14.30 கோடி ரூபாய் வழங்க, 2020 மே 16ல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மூத்த உறுப்பினரான அல்லம் வீரபத்ரப்பா, பெண்ணை ஆண் பார்க்கவில்லை; ஆணை பெண் பார்க்கவில்லை; ஆனால் குழந்தைக்கு பணம் ஒதுக்கியதாக விமர்சித்துள்ளார். நாங்கள் ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்துள்ளோம். நவிலே அணைக்கு பட்ஜெட்டில், 1,000 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளோம். விரைவில் திட்டத்தை துவங்குவோம்.காங்கிரஸ் – அல்லம் வீரபத்ரப்பா: கிருஷ்ண பஜாவத் திட்டத்துக்கு, கர்நாடகா சொத்து மட்டுமின்றி, மூன்று மாநிலங்களும் சேர்கிறது. அம்மாநிலங்களின் அனுமதியில்லாமல், திட்டத்தை துவக்க முடியாது. மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன், பல்லாரி, ஆந்திராவில் இருந்தது. அப்போது பஜாவத் தீர்ப்பின்படி, கிருஷ்ணா ஆற்றின் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்பட்டது.கர்நாடக அரசு முயற்சிஅதன்பின் பல்லாரி, கர்நாடகாவில் சேர்க்கப்பட்டது. பல்லாரிக்கு கிடைக்க வேண்டிய பங்கு தண்ணீர், கர்நாடகாவில் சேர்க்கப்படவில்லை. இந்த தண்ணீரை பெற்றுக்கொள்ள, கர்நாடக அரசு முயற்சிக்க வேண்டும்.அமைச்சர் கோவிந்த் கார்ஜோள்: இதற்கு முன் துங்கபத்ரா அணை கட்டும் போதும், நிஜாமுகள், மதராஸ், மைசூரு பகுதிகளிடம் அனுமதி பெற்றனர். இப்போதும் இந்த தண்ணீரில், கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா பங்குதாரர்களாக உள்ளன. கர்நாடகாவுக்கு 65 சதவீதம்; தெலுங்கானாவுக்கு 35 சதவீதம் பங்குள்ளது. நவிலே அணை கட்டும் திட்ட அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் 30 டி.எம்.சி., தண்ணீரை சேகரிக்கலாம்.முதல்வர் பசவராஜ் பொம்மை: இது முக்கியமான விஷயும். முதலில் பல்லாரி, ஆந்திராவில் இருந்தது. இது கர்நாடகாவில் சேர்க்கப்பட்ட பின், பல்லாரி பங்கு தண்ணீர், கர்நாடகாவுக்கு வழங்கபட்டுள்ளதா, இல்லையா என்பதை ஆவணங்களை ஆய்வு செய்த பின் தான் தெரியும். இது குறித்து அதிகாரிகளுடன், ஆலோசிக்கப்படும்.தற்போதுள்ள புதிய பிரச்னை என்றால், ஆந்திரா, தெலுங்கானா பிரிந்துள்ளது. பார்லிமென்டிலும் அங்கிகாரம் பெற்றுள்ளன. தடையுத்தரவு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து, புதிதாக நிர்ணயிக்கும்படி தெலுங்கானா தகராறு செய்தது. இது நியாயமானது இல்லை என்பதால், உச்சநீதிமன்றத்தை நாடி, தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.நான் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த போது, துங்கபத்ரா அணையில் மண்ணை அள்ள, இத்தாலியிலிருந்து, அதிநவீன இயந்திரத்தை வரவழைத்து முயற்சித்தேன். ஆனால் மண் இறுகி, கெட்டியாகி கல் போன்றாகியுள்ளது; இதை எடுக்க முடியவில்லை.எனவே, துங்கபத்ரா அணைக்கு சமமாக, நவிலே அருகில் அணை கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதுபற்றி ஆந்திர முதல்வருடன், பேச்சு நடத்தியுள்ளோம். அவரும் அதிகாரிகள் குழுவை அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார்.தெலுங்கானா முதல்வருடனும், ஆலோசனை நடத்துவோம். அனைவரின் அனுமதி கிடைத்த பின், திட்டத்தை செயல்படுத்துவதில், தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.