புது டில்லி: ஐ.நா., ஆதரவுடன் வெளியாகும் உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் அட்டவணையில் 2021ம் ஆண்டிலும் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 3 இடங்கள் முன்னேறி 136வது இடத்தில் உள்ளது.
உலக மகிழ்ச்சி அறிக்கை 2011ம் ஆண்டிலிருந்து வெளியிடப்படுகிறது. தற்போது அதன் 10வது ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது 2021க்கான அறிக்கை. இருப்பினும் 2019 முதல் 2021 வரையிலான தரவுகளின் சராசரியை அடிப்படையில் மகிழ்ச்சிக்கு 0 முதல் 10 வரையில் மதிப்பு வழங்குகிறது. மேலும் மகிழ்ச்சியைப் பற்றிய மக்களின் சொந்த மதிப்பீடு, ஜி.டி.பி., தனிப்பட்ட நல்வாழ்வு, தனிநபர் சுதந்திரம், ஊழல் மற்றும் சமூகத் தரவுகளின் அடிப்படையிலும் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பே தயாரிக்கப்பட்டதாகும்.
வடக்கு ஐரோப்பிய நாடுகள் இந்தாண்டும் பட்டியலில் முன்னணி வகிக்கின்றது. பின்லாந்து தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறது. டென்மார்க் 2ம் இடம், ஐஸ்லாந்து 3ம் இடம், சுவிட்சர்லாந்து 4ம் இடம் மற்றும் நெதர்லாந்து 5ம் இடமும் பெற்றுள்ளன. கோவிட் தொற்று உச்சத்திலிருந்த 2020ல் அமெரிக்கா மகிழ்ச்சி குறியீட்டில் பின் தங்கியிருந்த நிலையில் தற்போது 19வது இடத்திலிருந்து 16வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 2020ல் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் 139வது இடத்திலிருந்த இந்தியா 2021ல் 3 இடங்கள் உயர்ந்து 136வது இடம் வந்துள்ளது. அண்டை நாடான சீனா 72வது இடத்தில் உள்ளது. நேபாள் 84வது இடம் பிடித்துள்ளது. வங்கதேசம் 94ம் இடத்திலுள்ளது. ஆச்சர்யமாக கடன் தொல்லையில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு 121வது இடமும், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கைக்கு 127வது இடமும் தரப்பட்டிருக்கிறது.
சமூக ஆதரவு, ஒருவருக்கொருவர் பெருந்தன்மையுடன் இருப்பது மற்றும் நேர்மையான அரசாங்கம் ஆகியவை நல்வாழ்வுக்கு முக்கியம் என்பதே பல ஆண்டுகளாக உலக மகிழ்ச்சி அறிக்கை வலியுறுத்தும் பாடம் என அறிக்கையை தயாரித்தவர்கள் கூறியுள்ளனர்.
Advertisement