பெங்களூரு:
மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக கர்நாடகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேகதாது திட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து, மேகதாது திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தும் என்று அறிவித்தார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கியமான விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறிய பொம்மை, மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவேரி மேலாண்மை ஆணையத்திடம் உடனடியாக ஆலோசனை நடத்தும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார்.
‘அடுத்த கூட்டத்தில் காவேரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்படவேண்டும். இதுதொடர்பான கூட்டத்தை நடத்தும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் கர்நாடக அரசு கேட்டுக்கொள்ளும். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த கர்ஜோல் டெல்லி சென்று எங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பார்’ என்றும் பசவராஜ் பொம்மை கூறினார்.