திருச்சி: “தமிழக ஆளுநர் தனது கடமையை அரசியலமைப்புச் சட்டத்தின்படி செய்கிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி திருச்சியில் தங்கி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கையெழுத்திட்டு வருகிறார். இதன்படி, அவர் ஏற்கெனவே 2 முறை கையெழுத்திட வந்தபோதும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டு, முதல்வர் மற்றும் போலீஸாரை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே, டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் 143, 153, 504, 269, 279 மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கரோனா விதிகளை மீறியதாக தொற்றுநோய் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று 3-வது முறையாக டி.ஜெயக்குமார் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி உட்பட அதிமுகவினர் உடனிருந்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”பொதுவாக கட்சியின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் வரும்போது தொண்டர்கள் எழுச்சியுடன் திரண்டு வருவது வழக்கம். இதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்றார்.
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியது குறித்த கேள்விக்கு, “அங்கு வலியுறுத்துவார்கள். ஆனால், இங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆளுநரைச் சந்திப்பார்” என்றார்.
தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது குறித்த கேள்விக்கு, “ஆளுநரின் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி வரையறுக்கப்பட்டது. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், அவர் தனது கடமையை அரசியலமைப்புச் சட்டத்தின்படி செய்கிறார்” என்றார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து, “தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றப்போவதில்லை. வழக்கம்போல் திருநெல்வேலி அல்வா கொடுக்கும் வேலையைத்தான் செய்வார்கள். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் வேலையைத்தான் திமுக அரசு செய்து வருகிறது” என்றார்.
பின்னர், சட்டப்பேரவையின் மணப்பாறை தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளை வையம்பட்டியில் டி.ஜெயக்குமார் சந்தித்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”என் மீது பொய் வழக்கு பதிவு செய்து அதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் எங்களை எல்லாம் ஒன்றிணைத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறையில் அடிப்படை வசதிகூட செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய பதில் அவரது வக்கிர புத்தியைக் காட்டுகிறது.
பட்ஜெட்டை பொறுத்தவரை வழக்கமாக கொடுக்கும் அல்வாவை கொடுத்துள்ளனர். மக்களை ஏமாற்றியுள்ளனர். தேர்தலின்போது கூறியவாறு இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை கொடுப்பதற்கான அறிவிப்பு இல்லை. இந்தநிலையில், தற்போது மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களுக்கும் கொடுக்க வேண்டியதுதானே?” என்றார்.