பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’
இந்தத் திரைப்படம், 1990-களின் காலகட்டத்தில் காஷ்மீரில் பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்திருக்கும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், வரிச்சலுகையும் கொடுத்து ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
அந்த வகையில், ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் 100% வரிவிலக்கு அளித்திருக்கின்றன. இந்தத் திரைப்படம் தொடர்பாகத் தமிழக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, “ `Kashmir files’ என்கிற இந்திப் படம் பார்த்தேன். இது சினிமா அல்ல, ஆவணம், சரித்திரம் என்றே கூற வேண்டும்.
1990-ல் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான கொலை வன்முறை, 5,00,000-க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டது ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண முடிகிறது” எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா “ `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் பல பொய்யான விஷயங்கள் காட்டப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் ஃபரூக் அப்துல்லா ஆகிய நான் ஜம்மு & காஷ்மீரின் முதல்வராக இல்லை. அப்போது அங்கு ஆளுநர் ஆட்சி இருந்தது. பா.ஜ.க ஆதரவுடன் நாட்டில் வி.பி.சிங்கின் அரசு இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர், சிறுபான்மையினர், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் `1989 டிசம்பரில் பா.ஜ.க ஆதரவுடன் வி.பி.சிங் அரசு ஆட்சிக்கு வந்தது. பி.ஜே.பி ஆதரவுபெற்ற வி.பி.சிங் அரசாங்கத்தின் கீழ் ஜனவரி மாதம் 1990-ல் பண்டிட்களின் இடப்பெயர்வு தொடங்கியது.
அப்போது, பா.ஜ.க ஒன்றுமே செய்யவில்லை, பா.ஜ.க உண்மைக்குப் புறம்பாக இந்தப் படத்தைவைத்து அனுதாப அரசியல் செய்கிறது’ என விமர்சித்துவருகின்றனர்.