பாகிஸ்தானில் இம்ரான் ஆட்சி… கவிழ்கிறது! 24 எம்.பி.,க்கள் போர்க்கொடி| Dinamalar

இஸ்லாமாபாத் :பாக்., பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இத்தீர்மானத்தை ஆதரிக்க அவரது கட்சியை சேர்ந்த ௨௪ எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், இம்ரான் கானின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லி.,க்கு கடந்த 2018ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக,
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி வெற்றி பெற்றிருந்தது.

நம்பிக்கை

இதையடுத்து, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த இம்ரான், பிரதமராக பதவியேற்றார்.ஆனால், இம்ரான் கான் ஆட்சியில் பாகிஸ்தான் பல்வேறு சோதனைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில், பயங்கரவாத பிரச்னையும் அதிகரித்துள்ளது. அத்துடன், சர்வதேச அளவில் பாகிஸ்தான் ஓரங்கட்டப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா மீது இம்ரான் கான் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எந்த நாடும் மதிப்பதில்லை. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி, பண வீக்க உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, இம்ரான் அரசு மீது, நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக், பாக்.,
மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லி.,யில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

இந்த தீர்மானத்தின் மீது வரும், 28ம் தேதி ஓட்டெடுப்பு நடக்கிறது. தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இம்ரான் இருந்தார். ஆனால், இப்போது அவரது கட்சி எம்.பி.,க்களே போர்க்கொடி துாக்கியுள்ளனர். தங்கள் தொகுதி மக்களின் குறைகளை அரசு தீர்க்கவில்லை என குற்றஞ்சாட்டி, இம்ரானுக்கு எதிராக, அவர் கட்சியின் எம்.பி.,க்கள் ராஜா ரியாஸ், நுார் ஆலம் கான் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.தங்களுக்கு 22 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதாக ராஜா ரியாஸ் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை

இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட உள்ள அதிருப்தி எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, இம்ரான் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற, மொத்தம் உள்ள, 342 எம்.பி.,க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. இம்ரான் கட்சிக்கு, 155 எம்.பி.,க்கள் உள்ளனர். அத்துடன் ஆறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த, 23 எம்.பி.,க்களின் ஆதரவும் உள்ளது. ஆனால், அதிருப்தி எம்.பி.,க்கள், 24 பேர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டால் இம்ரான் கான் அரசு கவிழ்ந்துவிடும். தன் ஆட்சி கவிழ்வதை தடுக்க, வரும் ௨௭ம் தேதி, தலைநகர் இஸ்லாமாபாதில் பார்லிமென்ட் கட்டடம் அருகே உள்ள ‘டி சவுக்’ பகுதியில், ௧௦ லட்சம் தொண்டர்களை திரட்டி மாபெரும் பேரணி நடத்த, இம்ரான் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் பேரணியை முறியடிக்க, வரும் ௨௫ம் தேதியன்று டி சவுக் பகுதிக்கு வருமாறு தொண்டர்களுக்கு எதிர்க்கட்சிகள் உத்தரவு பிறப்பித்துஉள்ளன. இதனால் பாக்., அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராணுவ ஆட்சி ஏற்படுமா?

பாகிஸ்தானில் அரசியல் குழப்பங்கள் ஏற்படும் போதெல்லாம், ராணுவ ஆட்சி ஏற்படுவது வழக்கமாக உள்ளது. பாகிஸ்தானில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களை, ராணுவம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘நாங்கள் நடுநிலை வகித்து வருகிறோம். அரசுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ செயல்படும் எண்ணம் இல்லை’ என்றார்.
இதனால் அதிருப்தியடைந்த இம்ரான், ”விலங்குகள் தான் நடுநிலை வகிக்கும், மனிதர்கள் ஏதாவது ஒரு பக்கம் ஆதரவாகவே இருப்பர்,” என, விமர்சித்துள்ளார். இதற்கு ராணுவம் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனினும் ‘அரசியல் குழப்பம் அதிகரித்தால், நாட்டில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது’ என, அந்நாட்டு அரசியல் வல்லுனர்கள் கூறினர்.

பாகிஸ்தானில் ‘ரிசார்ட்’

நம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில், ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால், அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கும் எம்.எல்.ஏ.,க்கள், வேறு மாநிலங்களில், ‘ரிசார்ட்’ எனப்படும் நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருப்பது வழக்கம்.
பாகிஸ்தானிலும் இந்த வழி கடைப்பிடிக்கப்படுகிறது.பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பாக்., மக்கள் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தலைநகர் இஸ்லாமாபாதில், சிந்து அரசுக்கு சொந்தமான, ‘சிந்து இல்லத்தில்’ இம்ரான் கானுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள 24 எம்.பி.,க்கள், தங்க வைக்கப்பட்டுள்ளனர். ‘எங்கள் கட்சி எம்.பி.,க்களை, பாக்., மக்கள் கட்சி விலை கொடுத்து வாங்கியுள்ளது’ என, தெஹ்ரிக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, சிந்து அரசை கலைக்கவும், இம்ரான் கான் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.’தெஹ்ரிக் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள், தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே, சிந்து இல்லத்தில் தங்கியுள்ளனர்’ என, பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.