பனாஜி:
அண்மையில் நடந்து முடிந்த கோவா சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 11 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 20 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், அதற்கான முயற்சிகளில் அம்மாநில பாஜக ஈடுபட்டு வருகிறது.
தற்போது காபந்து முதலமைச்சராக உள்ள பிரமோத் சாவந்த், பாஜக மத்திய பார்வையாளர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு பின் புதிய அரசு பதவியேற்பு விழா குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவா காங்கிரஸ் மூத்த தலைவரும், அம்மாநில எதிர்க் கட்சித் தலைவருமான திகம்பர் காமத், கோவாவில் ஆட்சி அமைப்பதை பாஜக தாமதப்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப் போவதாக பாஜக அறிவித்தது. ஒரு வார காலம் கடந்தும், பாஜக அதைச் செய்யத் தவறிவிட்டது.
பாஜக ஏதாவது ஒரு சாக்கு சொல்லி நேரத்தை வீணடிக்கிறது. ஆட்சி அமைக்க அந்த கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என அவர் கூறியுள்ளார்.
மேலும், கோவாவில் பாஜக அல்லாத ஆட்சியை அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் காங்கிரஸ் ஆராயும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி வேறுபாடின்றி பல எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸை அணுகி ஆட்சி அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படி காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், பாஜக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி, அந்த ஆட்சியைப் பறிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…
தேர்தல் தோல்விக்கு சோனியா மட்டுமே காரணம் இல்லை- ப.சிதம்பரம் பேட்டி