திருச்சி: திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் படுகொலை வழக்கு தொடர்பாக எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தெரிவிக்கலாம் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
2012, மார்ச் 29-ம் தேதி கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை கொலையாளிகள் குறித்து எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹகில் அக்தர் மேற்பார்வையில் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.மதன், சிபிஐ டிஎஸ்பி ஹரி மற்றும் பல்வேறு பிரிவு போலீஸார் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், கே.என்.ராமஜெயம் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடம், வழக்கமாக நடைப்பயிற்சி செல்லும் பாதைகள், சடலம் கிடந்த இடம் ஆகியவற்றை அண்மையில் நேரில் பார்வையிட்டதுடன், திருச்சி, சேலம், கோவை, கடலூர், புதுச்சேரி என பல்வேறு இடங்களுக்கும் சென்று பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 40 பேரை கூடுதலாக நியமித்து குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 5 அல்லது 6 தனிப்படைகளாக பிரிக்கப்பட்டு, கே.என்.ராமஜெயம் படுகொலை சம்பவம் தொடர்பாக வெவ்வேறு கோணங்களில் ஓரிரு நாட்களில் மிக ஆழமான விசாரணையைத் தொடங்கவுள்ளனர். மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு விசாரணையின் நிலைக் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கவுள்ளது.
தெரிந்த தகவலைத் தெரிவிக்க அழைப்பு: இந்தநிலையில், “கே.என்.ராமஜெயம் படுகொலையில் ஈடுபட்ட கொலையாளிகள், தொடர்புடைய நபர்கள் ஆகியோர் குறித்து எந்தவொரு தகவல், எவருக்குத் தெரிந்தாலும், அவர்கள் அதை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் காவல் கண்காணிப்பாளரை 90806 16241, காவல் துணைக் கண்காணிப்பாளரை 94981 20467, 70940 12599 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். சரியான தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்குவதுடன், அவர்களது விவரம் ரகசியம் காக்கப்படும்” என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று தெரிவித்தார்.