சென்னை: புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தலா 10 கோடி ரூபாய் என மொத்தம் 60 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும். மேலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா 2 கோடி ரூபாய் என மொத்தம் 56 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > திடக்கழிவு மேலாண்மை உட்பட, முழுமையானசு காதாரத்தை உறுதி செய்வதற்கான, இரண்டாவது தூய்மை இந்தியா இயக்கம், மத்திய அரசின் நிதி உதவியுடன் அரசால் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மாநிலப் பங்கீடாக 2,169 கோடி ரூபாயுடன் மொத்தமாக 5,465 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் ‘Bio-mining’முறையில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.
> அம்ருத் 2.0 திட்டத்திற்கான ஒட்டுமொத்த திட்டமதிப்பு சுமார் 13,000 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் பங்களிப்பின் வாயிலாக இத்திட்டத்தின் மூலம் பல்வேறு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்களை அரசு செயல்படுத்தும். இம்மதிப்பீடுகளில் அம்ருத் திட்டத்திற்கு 2,130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய ஆறு மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு, தலா 10 கோடி ரூபாய் என மொத்தம் 60 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும்.
மேலும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா 2 கோடி ரூபாய் என மொத்தம் 56 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும்.
> 200 ஆண்டுகளுக்கு முன், ஜூன், 1822 இல் ஜான் சல்லீவன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்டதே இன்றைய நீலகிரி மாவட்டத்தின் தலைமையிடமான உதகை நகரமாகும். இதனை நினைவுகூரும் வகையில் சிறப்புத் திட்டங்களும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ள 10 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படுகிறது.
> நகர்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.
> அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று, புதிய மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாயும், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்கு1,875 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 20,400.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் போதுமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் 542 கூட்டுக்குடி நீர்திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2,208 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் 5.64 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 6 புதிய கூட்டுகுடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும். குடியிருப்புக்கு குடிநீர் (ஜல்ஜீவன்) திட்டத்திற்காக 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> மெட்ரோ ரயில் தடங்கள், புறநகர் ரயில் தடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், புறவழிச்சாலைகள், வெளிவட்டச்சாலைகள் போன்ற போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டியுள்ள பகுதியில் நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, அப்பகுதிகளில் தற்போதுள்ள தளப்பரப்புக் குறியீட்டை (FSI) உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதனுடன், இந்தப் பகுதிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்படுத்தப்படும்.
> தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழுதடைந்த, பழைய குடியிருப்புப் பகுதிகளின் மறுமேம்பாடு (re-development) மேற்கொள்ளப்படும். இதற்காக, அரசு ஒரு “மறுமேம்பாட்டுக் கொள்கையை” இந்த ஆண்டு வெளியிடும். இதுவரை அறுபது திட்டங்கள் இதற்காகஅடையாளம் காணப்பட்டு, தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் அதிகபட்ச தளப்பரப்பை அடைவதற்கு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டம்செயல்படுத்தப்படும்.
> மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் நீளமுள்ள வெளிவட்டச் சாலையின் (ORR) கிழக்குப் பகுதியில் 50 மீட்டர் அகலமுள்ள நிலம், வளர்ச்சிப் பெருவழியாக (Development Corridor)மேம்படுத்தப்படும். இந்தப் பெருவழியை அடுத்துள்ள பகுதிகளில், குடியிருப்பு நகரியம், சிப்காட் தொழிற்பூங்காக்கள், பொழுதுபோக்குப் பகுதிகள், சேமிப்புக் கிடங்குகள், தோட்டக்கலைப் பூங்காக்கள், இயற்கை உணவு பதப்படுத்தும் மண்டலம் மற்றும் தயார் நிலையில் உள்ள தொழிற்கூடங்கள் (plug-and-play) ஆகியவற்றை அமைத்திடதிட்டமிடுவதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தப் பெருவழியில் முழுமையான வளர்ச்சியை அடைய, தளப்பரப்புக் குறியீடும் (FSI) உயர்த்தப்படும்.
> திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல்,மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், பெருநகர சென்னை மாநகராட்சி, உள்ளூர் திட்டக் குழுமங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும்.
> பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்திற்காக (நகர்ப்புறம்) 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 8,737.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.