லீவ்:உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் லீவ் நகரின் புறநகர் பகுதிகளில், ரஷ்ய படையினர் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரஷ்ய ராணுவம் கடந்த மாதம் 24ல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், தாக்குதலில் இருந்து தப்பிக்க, உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
இதையடுத்து, ரஷ்யாவுக்கு எதிராக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன், ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் பற்றிய வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு ரஷ்யாவுக்கு உத்தரவிட்டது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை ரஷ்ய ராணுவத்தினர், தலைநகர் கீவின் வடக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், ஒருவர் உயிர் இழந்தார். கிரமாடோர்ஸ்க் நகரில் குடியிருப்பு மற்றும் அரசு கட்டடங்கள் அமைந்துள்ள பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு பேர் உயிர் இழந்தனர்.
இதேபோல், போலந்து எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள லீவ் நகரின் புறநகர் பகுதியில், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ போர் விமானங்களை பழுதுபார்க்கும் மையமும், பஸ் பழுதுபார்க்கும் மையமும் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய கவர்னர் மக்சிம் கோஜிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்காக, கருங்கடல் பகுதியில் இருந்து ஆறு ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும்; இதில் இரண்டு ஏவுகணைகளை, உக்ரைன் விமானப் படையினர் வழிமறித்து தகர்த்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடின் நேற்று பிரமாண்ட பேரணியில் பங்கேற்றார். அப்போது, உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள தங்கள் நாட்டு வீரர்களை அவர் பாராட்டி பேசினார்.
உக்ரைன் நடிகை பலி
உக்ரைன் தலைநகர் கீவில், குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், உயிரிழந்த அவர், பிரபல நடிகை ஆக்ஸானா ஷ்வேட்ஸ், 67, என்பது தெரியவந்துள்ளது. உக்ரைனில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதை இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘டிவி’யின் உரிமம் ரத்து
பிரிட்டனில், ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ‘ஆர்.டி., டிவி’ உக்ரைனில் நடந்து வரும் போர் குறித்து ஒருதலைப்பட்சமாக செய்திகளை வெளியிடுவதாக கூறி, அதன் உரிமத்தை, பிரிட்டனின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று ரத்து செய்துள்ளது.
சீன படைகள் சென்றனவா?
ரஷ்ய படைகளுக்கு உதவுவதற்காக சீன ராணுவம் சென்றுள்ளதாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதை சீனா மறுத்துள்ளது. ‘தவறான புகைப்படங்களை வெளியிட்டு, வேண்டுமென்றே சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். சீன படைகள் ரஷ்யாவுக்கு செல்லவில்லை’ என, சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.