சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கடந்த 2 நாட்களில் 4 மான்கள் இறந்ததாக ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் ஒரு மானுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் இருந்தது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மனிதர்களுக்கு பரவுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு, ஐ.ஐ.டி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கடந்த 2 நாட்களில் 4 மான்கள் இறந்ததாக ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மான்கள் இறந்த பகுதி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு வழிகாட்டியுள்ளனர்.
சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐ.ஐ.டி) வளாகத்தில் உள்ள ஒரு மான், ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது வளாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2 நாட்களில் 4 மான்கள் இறப்பை பதிவு செய்துள்ளது. உயிரிழந்த மான்களில் ஒரு மானுக்கு‘ஆந்த்ராக்ஸ்’ நோய் இருப்பது தெரியவந்தது. மற்ற 3 மான்களுக்கு சோதனைகள் முடிவு வெளிவரவில்லை.” என்று தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய சுகாதாரத் தளத்தின்படி, ஆந்த்ராக்ஸ் ஒரு விலங்குகளிடம் இருந்து பரவும் தொற்று நோயாகும். அதாவது, இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.
அதனால், இந்த நோய் தொடர்பான நெறிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சியின் வனவிலங்கு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் வழிகாட்டி வருவதாக சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் தெரிவித்துள்ளது. “இறந்த மான்களின் உடல்களுக்கு அருகாமையில் இருந்த வனவிலங்கு பணியாளர்கள் உட்பட அனைத்து பராமரிப்பாளர்களுக்கும் அல்லது மான்களின் உடலைக் கையாண்டவர்களுக்கும் அடுத்த 10 நாட்களுக்கு எங்கள் மருத்துவமனையால் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆந்த்ராக்ஸுக்கு எதிரான தடுப்பூசிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் கருத்துப்படி, உடனடி தலையீட்டிற்காக 9 பேர் கொண்ட குழு அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. மேலும் ஆண்டிபயாடிக் மருந்து நிர்வகிக்கப்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.
“இந்த நோய் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் எப்படி நுழைந்தது என்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்து, இதுபோல நாங்கள் எந்த நோயையும் கண்டதில்லை. மான் அல்லது மற்ற வனவிலங்குகள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதில்லை. நாய்கள் வைத்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது ஒரு அவசர நிலை என்பதை உறுதிப்படுத்திய அதே வேளையில், அப்பகுதியில் உள்ளவர்கள் பீதியடைய வேண்டாம் என்று சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழு விழிப்புடன் இருப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“