புவனேஸ்வர் ; புரோ ஹாக்கி லீக் தொடரில் இன்று இந்தியா, அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், ஐ.பி.எல்., பாணியில் ஆண்கள், பெண்கள் அணிகளுக்காக புரோ ஹாக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் தலா இரு முறை மோதும். முடிவில் ‘டாப்-4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
கொரோனா காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து விலகிக் கொள்ள 9 அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்திய ஆண்கள் அணி, 6 போட்டியில் 4ல் வென்று 12 புள்ளியுடன், பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது சொந்தமண்ணில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக 2 போட்டிகளில் மோதுகிறது.
முதல் போட்டி புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இன்று நடக்கவுள்ளது.சமீபத்தில் இங்கு நடந்த ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 3-5 என தோற்ற போதும், இளம் வீரர்களை களமிறக்கி சோதனை செய்யும் முயற்சியை பயிற்சியாளர் கிரஹாம்ரீடு தொடர முடிவு செய்துள்ளார். இதனால் வரும் காமன்வெல்த், ஆசிய விளையாட்டில் சாதித்து, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற, இம்முயற்சி கை கொடுக்கும் என நம்பப்படுகிறது.
இந்திய அணியில் கோல் கீப்பர் கிருஷ்ணன், அமித் ரோகிதாஸ் உள்ளிட்டோருடன் இளம் வீரர்கள் அபிஷேக், அறிமுகம வீரராக ‘ஜூனியர்’ உலக கோப்பை தொடரில் பங்கேற்ற ரபிசந்திர சிங் களமிறங்க உள்ளனர். உலகத் தரவரிசையில் 6வது இடத்திலுள்ளது அர்ஜென்டினா. இதுவரை 4 போட்டியில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று, பட்டியலில் 6வது இடத்திலுள்ளது. சமீபத்திய போட்டிகளில் 2-0, 3-1 என இங்கிலாந்தை வென்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
Advertisement