உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் வரும் 25ஆம் தேதி பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. வரும் 25ஆம் தேதி தலைநகர் லக்னோவில் உள்ள மைதானத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் என அம்மாநில உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக பாரதிய ஜனதா உறுப்பினர்களின் தலைவராக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு அனுப்பப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக, கடந்த மார்ச் 10 ஆம் தேதி உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 255 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. சமாஜ்வாதி கட்சி 111 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 1 இடத்திலும் வென்றது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM