நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களைப் போல உருவாக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்படுவதாகவும், நாமக்கல் சோளீஸ்வரர் கோவிலின் பழமையான கற்கள் உடைக்கப்படுவதாகவும், திருவெள்ளறை கோவில் சேதப்படுத்தப்படுவதாகவும் ரங்கராஜன் நரசிம்மன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில்களைப் போன்ற அற்புதமான கட்டுமானம், தொழில்நுட்பம் மற்றும் முறையான ஆகம விதிப்படி கட்ட முடியாது என்று தெரிவித்தனர். எனவே பழமையான கோவில்களை முறையாக பராமரித்து சிறப்பாக பாதுகாக்க வேண்டுமென அறிவுறுத்தினர். மனுதாரரின் புகார்கள் குறித்து புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM