திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக அடுத்த மாத (ஏப்ரல்) தரிசனத்துக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை), மே மாத தரிசனத்துக்கு 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), ஜூன் மாத தரிசனத்துக்கு 23-ந் தேதி (புதன்கிழமை) என 3 நாட்களில் ரூ.300 டிக்கெட்டுகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
மேற்கண்ட நாட்களில் காலை 9 மணி முதல் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் தங்களின் தரிசன தேதியை குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ரூ.300 டிக்கெட்டுகள் திங்கள் முதல் புதன் கிழமை வரை ஒரு நாளைக்கு 30 ஆயிரமும், வியாழன் முதல் ஞாயிறு வரை ஒரு நாளைக்கு 25 ஆயிரமும் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.
அதேபோல் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் தங்கும் விடுதி வளாகம், ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில் சாதாரண பக்தர்களுக்கு நேரில் (ஆப் லைனில்) நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் இதனை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்…ஓதிமலை முருகன் கோவில்