தமிழக பட்ஜெட் பற்றிய மக்களின் கருத்து என்ன?

சென்னை:

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருந்தன.

இந்த பட்ஜெட் குறித்த மக்களின் கருத்துகள் வருமாறு:-

கல்லூரி மாணவி குர்பானி பேடி:-

எல்லா துறைகளும் எல்லா வளர்ச்சியையும் பெறவேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என்று முதல்-அமைச்சர் கூறி வருகிறார். அது இந்த பட்ஜெட்டில் எதிரொலித்திருக்கிறது. அனைத்து பிரிவுகளிலும் ஒருபோல வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தங்கள் படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்கவேண்டும் என்பதுதான் கனவாக லட்சியமாக இருக்கிறது. அந்த நம்பிக்கை ஒளி தெரியும் வகையில் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் பல தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தது இளைஞர் சமுதாயத்துக்கு புதிய தெம்பை அளித்துள்ளது.

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள், இப்போது தொழிலை நடத்திக்கொண்டு இருக்கும் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருப்பது உற்சாகத்தை அளிக்கிறது. திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி உலகளவிலான பங்களிப்புடன் அறிவுசார் நகரம் உருவாக்கப்படும், பல்கலைக்கழக வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் நிறுவன ஊக்குவிக்கப்படும் என்பது மாணவர் சமுதாயத்துக்கு அளித்த பரிசாகும். அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகளுக்கு கல்லூரி படிப்புகளில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்பது பெண் கல்வியை குறிப்பாக அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் பெண் குழந்தைகள் உயர்படிப்புக்கு செல்ல வழிவகுக்கும் என்பதால், அந்த சகோதரிகளின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இல்லத்தரசி எஸ்.பட்டுதேவி:-

பட்ஜெட்டின் தாக்கத்தை பெரும்பாலும் இல்லத்தரசிகள்தான் அதிகம் உணருவார்கள். ஏனெனில் மாதந்தோறும் குடும்ப பட்ஜெட் போட்டு செலவழிக்கும் போது பட்ஜெட்டின் விளைவுகள் அதிகம் தெரியும். இந்த பட்ஜெட் வரியில்லா பட்ஜெட். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இழப்பை அரசே ஏற்றுவிடும் என்பதால் மின் கட்டண உயர்வு இருக்காது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்றப் போவதற்கான முதல்கட்ட முயற்சிகள், அதாவது பயனாளிகளை கண்டறியும் பணி தொடங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. இக்கட்டான நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் இருப்பதை வைத்துக் கொண்டு நிறையவே செய்து இருக்கிறார்கள். பாராட்டுக்குரியது.

ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி:-

தற்போதுள்ள நிதித்தட்டுப்பாட்டை மனதில்கொண்டு, அகலக்கால் வைக்காமல் அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது. புதிய வரிகள் இல்லை என்பது நிச்சயமாக நல்ல செய்தி. கூடவே, ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேலான மின்வாரியத்தின் இழப்பை நுகர்வோர்மீது ஏற்றாமல், அரசே முன்வந்து ஏற்றுக்கொண்டிருப்பதும், இத்துடன் ரூ.9 ஆயிரத்து 379 கோடிக்கு மானியம் வழங்குவதும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடியதே. பொருளாதார வசதியற்ற, அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள். மிக நல்லதிட்டம். மனதார வரவேற்கலாம்.

ஆதிதிராவிடர் பள்ளிகளில் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஐந்தாண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி, இவ்வாண்டு ரூ.1,300 கோடி, மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி, 6 மாவட்டங்களில் நவீன நூலகம், அரசுச்சொத்துகளின் மேலாண்மைக்காக சிறப்பு மென்பொருள், சமூக மேம்பாடுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிமையம் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தமையால் ஏமாற்றம் சற்றே கூடுதலாக இருப்பது உண்மைதான். நிதிநிலைமை சீரடையும்போது மேலும் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

பட்டதாரி ஆசிரியை மாலதி:-

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்கள் நலனில் கொண்டுள்ள அதிக அக்கறை காரணமாகவே கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது வரவேற்கத்தக்கது.

அதிலும், அரசு பள்ளிகளை நவீன மயமாக்குவதற்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மூலம் பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று கூறியிருப்பதும், அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, மேலும் 15 மாவட்டங்களில் முன்மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

புத்தக வாசிப்பை மேம்படுத்த சில திட்டங்களை அறிவித்திருப்பது, மாணவர்களின் வாசிப்புத்திறனை மேலும் அதிகப்படுத்தும். இதனையும் வரவேற்கிறேன்.

வக்கீல் சுபாஷினி:-

மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு இல்லை. இருப்பினும், அதற்கான திட்டத்தை வடிவமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள். அந்த திட்டத்தை செயல்படுத்தினால் பல குடும்பங்கள் பயன் அடையும்.

தொழில்கள், தொழில் நிறுவனங்களுக்கு சில அறிவிப்புகள், திட்டங்களை அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. மேலும் வெள்ள காலத்தில் மக்களை பாதிக்கக்கூடிய தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டிருப்பதும், தமிழகத்தில் 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருப்பதும் மக்களின் மீதான அக்கறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

பள்ளி மாணவிகள் லேகாஸ்ரீ, சந்தியா:-

கல்வி கற்றல் இழப்பை சரிசெய்ய வரும் நிதியாண்டிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று எங்கள் மீது கொண்ட அக்கறையால் பட்ஜெட்டில் கூறியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

இதைப்போல மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் மூலம் 6-ம் வகுப்பு 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இல்லாமல் முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் எங்களுடைய கல்வி கனவை எந்த செலவும் இல்லாமல் நிறைவேற்ற முடியும். இதற்கு அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

சட்டக்கல்லூரி மாணவி சிந்தனா ஆண்டவன்:-

மழை காலங்களில் சென்னை ஸ்தம்பித்து போய்விடும். வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னையை மீட்டெடுக்க, வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சி. வெள்ளப் பாதிப்புக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும். அதேபோல, வெள்ளப்பாதிப்புக்கு முக்கிய காரணம், வானிலையை துல்லியமாக கணக்கிடாமல் போனது தான் என்று சொன்னார்கள். அதற்கும் இந்த பட்ஜெட்டில் சில திட்டங்களை அறிவித்து, நிதியும் ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறன்.

சுற்றுச்சூழல், வனப்பாதுகாப்பில் அதிக கவனத்தை இந்த பட்ஜெட் செலுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது. உதாரணமாக சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா, இயற்கை பூங்காவாக மறுவடிவமைப்பு செய்யப்படும் என்று கூறியிருப்பதும் நல்ல அறிவிப்புதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.