பெரம்பலூரில் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு காதலியுடன் பேசிக் கொண்டே இருசக்கரவாகனத்தில் சென்ற போது செண்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் நடந்துள்ளது.
தங்களுக்கு இடையில் காற்றுப்புக கூட இடம் கொடுக்காமல் இரு சக்கரவாகனத்தில் சாலையை கிழித்துக் கொண்டு பறக்கும் இளம் காதல் ஜோடிகளை பலரும் பார்த்திருக்கலாம். ஆபத்தை உணராமல் இவ்வளவு வேகமாக போய் என்ன செய்ய போகின்றனர் ? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும், அப்படி அதிவேகத்தில் சென்ற காதல் ஜோடி ஒன்று விபத்தில் சிக்கிய துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று பெரம்பலூர் அருகே நிகழ்ந்துள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டிவிகே நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நவீன்குமார். 23 வயதான இவர் பிஎஸ்சி பயோ கேமிஸ்ட்ரி படித்து முடித்துவிட்டு போலீஸ் எழுத்து தேர்வுக்காக தனியார் கோச்சிங் சென்டரில் படித்து வந்தார்.
கபடி வீரரான நவீன் குமார் வியாழக்கிழமை அதிகாலை தனது தாய் ரேவதியிடம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் கபடி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடி விட்டு வருவதாக கூறிவிட்டு தனது பைக்கில் புறப்பட்டு சென்றுள்ளார்
ஆனால் கபடிப்போட்டிக்கு செல்லாமல் தனது காதலியான 19 வயது இளம் பெண்ணை சந்திக்க பெரிய செருவத்தூர் சென்ற நவீன்குமார், காதலியை அழைத்துச்சென்று பெரம்பலூரில் உள்ள கோலிலில் வைத்து மஞ்சள் தாலி கட்டி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
அங்கிருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக் குறிச்சி செல்வதற்காக அதிவேகமாக சென்றுள்ளார். திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் காதல் ஜோடிகள் மெய்மறந்து பேசியவாறே சாலையில் அதிவேகமாக பயணித்ததாக கூறப்படுகின்றது. வாலிகண்டபுரத்தை கடந்து தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பை கிராமம் அருகே சென்றபோது நவீன்குமாரின் பைக் எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் நவீன்குமார் தலைகவசம் அணியாததால் கீழே விழுந்த வேகத்தில் தடுப்பு சுவற்றில் மோதி அவரது தலை மற்றும் நெற்றிப்பகுதி பிளந்து பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியனார்.
அவருடைய காதல் மனைவியான அந்த புதுப் பெண்ணோ தூக்கி வீசப்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் சாலையில் கிடந்தார். தகவலறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் உயிருக்கு போராடிய அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கபடி விளையாட சென்ற தன் மகன் வெற்றியோடு திரும்பி வருவான் என்று காத்திருந்த நவீன் குமாரின் தாயிடம் , இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் நவீன்குமார் சடலம் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே சுய நினைவு திரும்பிய பின்னர் அந்த இளம் பெண் தனது சகோதரருடன் வீட்டுக்கு சென்று விட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை நவீன்குமார் தலைக்கவசம் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து, கவனசிதறலை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை தவிர்த்து நிதானத்துடன் வாகனத்தை இயக்கினால் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.