வேளாண் பட்ஜெட்- மின்மோட்டார் பம்பு செட்டுகளுக்கு ரூ.5 கோடி மானியம்

சென்னை:

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மண்ணில் உண்டியல் போல சேமித்த மழைநீரை குழாய்க் கிணறு, ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றிலிருந்து பாசனத்திற்கு இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் பொருத்தவும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் 5,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் மொத்தம் ஐந்து கோடி ரூபாய் 2022-23-ம் ஆண்டில் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களில் நீரை சீராக கொண்டு செல்வதற்கும், சரியான நேரத்தில், தேவையான அளவில் நீர் கடைமடையை அடையவும் “சி”, “டி” பிரிவு வாய்க்கால்களைத் தூர்வாருவது மிக அவசியம்.

இதனை கருத்தில் கொண்டு, காவேரி, வெண்ணாறு வடிநிலப்பகுதியில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2022-23-ம் ஆண்டில் ஆயிரத்து ஐநூற்று எண்பது கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி”, “டி” வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள், இரண்டு லட்சம் ஏக்கர் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஐந்து கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

உணவே மருந்து என்பதற்கும், மருந்தே உணவு என்பதற்கும் பண்டைக் காலத் தமிழர்களின் வாழ்வையும் தமிழ் மருத்துவத்தின் அடிப்படையையும் சான்றாகக் கூறலாம். 2022-23-ம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மூலிகை தோட்டங்கள் நான்கு ஆயிரம் வீடுகளில் அமைக்கப்படும். இதற்கு தேவையான மூலிகைச்செடிகள், அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் முருங்கை நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.