சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து – 8 பேர் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள பாவகடா அருகே, தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சுமார் 60 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று, தும்கூர் மாவட்டத்தில் உள்ள பாவகடா என்ற பகுதி அருகே வந்த போது, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில், 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தும்கூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தில் சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது.

இந்த பேருந்தில் அதிகளவில் மாணவர்கள் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் அஞ்சப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.