பெங்களூரு:
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவ, மாணவிகள் நேரடியாக பள்ளிக்கு செல்ல முடியாமல் ஆன்லைன் மூலமாக கல்வி கற்று வந்தனர்.
தற்போதுதான் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனாவால் பள்ளிக்கு செல்லாததால் 70 முதல் 80 சதவீதம் குழந்தைகளின் வாசிக்கும் திறமை மற்றும் எழுதும் திறன் குறைந்து விட்டதாக ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்களில் கல்வி அவசர நிலைக்கான தேசிய கூட்டமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜனவரி வரை குறைந்த வருமானம் உள்ள பெற்றோர்களிடம் நடத்தி ஆய்வில் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக்கு செல்லாததால் தங்களின் குழந்தைகளின் படிக்கும் மற்றும் எழுதும் திறன் குறைந்து அதே நிலையில் இருப்பதாக 70 முதல் 80 சதவீதம் பெற்றோர்கள் அஞ்சி உள்ளனர்.
குழந்தைகள் எழுத்துக்களை மறந்துவிட்டதாகவும், எதிர்காலம் குறித்து அச்சப்படுவதாகவும் தெரிவித்தனர்.
குழந்தைகள் இடையேயான நடத்தை மாற்றம், கவனம் இல்லாமை, செல்போனுக்கு அடிமையானது ஆகியவற்றாலும் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். கல்வியில் ஆர்வமின்மை செல்போன்கள், கேம்கள், டி.வி.க்கு அடிமையானது, உணவு பழக்கங்களில் மாற்றம், மன அழுத்தம் மற்றும் தனிமை ஆகியவை காரணமாக குழந்தைகள் வாசிக்கும் திறனும், எழுதும் திறனும் குறைந்து விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பள்ளிகள் மூடப்பட்டதால் சிறிய குழந்தைகள் தினசரி உணவு மற்றும் சுகாதாரத்தை இழந்து விட்டதாக பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர்.
பல பெற்றோர்கள் வேலைக்கு வெளியே சென்று விடுகிறார்கள் என்றும் வீட்டில் குழந்தைகளை கண்காணிக்க யாரும் இல்லை என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் சில பெற்றோர் ஆன்லைன் மூலம் தங்கள் குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் அடைந்ததாக தெரிவித்து உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.