புதுடெல்லி: பாதிக்கப்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு நாம் உதவ வேண்டும், அதேசமயம் அங்குள்ள முஸ்லிம்களை மோசமாக சித்தரிப்பது பண்டிட்டுகளுக்கும் உதவாது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் கிளர்ச்சியின்போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த படம் தொடர்பாக பேஸ்புக்கில் வெளியான பதிவை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘இந்த பதிவு பெரும்பாலும் சரியானது.
காஷ்மீரி பண்டிட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களின் உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் காஷ்மீரி முஸ்லிம்களை மோசமாக சித்தரிப்பது பண்டிட்டுகளுக்கும் உதவாது. வெறுப்பு பிரித்து கொல்லும். காஷ்மீர் மக்களுக்கு நீதி வேண்டும். அனைவரும் கேட்கட வேண்டும், உதவ வேண்டும். அவர்களை பாதிப்பில் இருந்து மீட்க வேண்டும்.’’ எனக் கூறியுள்ளார்.