உலகம் முழுவதும் பல்வேறு விதமான திருமண நடைமுறைகள் இருந்து வருகிறது. அவரவர் மதத்திற்கு ஏற்ப வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில், ஒரு ஆணிற்கு ஒரு பெண்ணை பிடித்து போய்விட்டால் அந்த பெண்ணை திட்டம் போட்டு கடத்தி விடுவர். கடத்திய இரவு முழுவதும் அந்த பையனின் வீட்டார், பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்பார்கள். இரவு முழுவதும் அந்த பெண் வீட்டார் அவரை தேடுவார்கள். தேடியும் கிடைக்காத பட்சத்தில் மறுநாள் காலை, அந்த பெண் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரிய வரும். அந்த சமயத்தில் பெண்ணை கடத்தி சென்றவருக்கே திருமணம் செய்து வைத்து விடுவர்.
மேலும் படிக்க | திருமணத்தை விட்டு விலகி ஓடும் தென் கொரிய இளைஞர்கள்… காரணம் என்ன!
இது பாரம்பரியமாக, அலா கச்சுவின் கிர்கிஸ் வழக்கம் என்று கூறப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அலா கச்சுவின் வழக்கம், பெண்களைக் கடத்திச் சென்று அவர்களின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து வைக்கும் ஒரு வழியாகப் பயன்படுத்தப்பட்டது. கிர்கிஸ்தானில் மணப்பெண் கடத்தல் பழக்கம் சற்று அதிகமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை 2018- அறிக்கையின் படி, 24 வயதிற்குட்பட்ட கிர்கிஸ் பெண்களில் கிட்டத்தட்ட 14 சதவிகிதத்தினர் ஏதோவொரு வற்புறுத்தலின் மூலம் திருமணம் செய்துகொண்டனர். அதே ஆண்டு, திருமண நோக்கத்துடன் கடத்தப்பட்டதாக 895 புகார்களைப் காவல்துறையினர் பெற்றதாகக் கூறினார்.
இருப்பினும், இந்த தரவுகள் முழு பிரச்சனையும் வெளிப்படுத்தியதாக கூறப்படுவதில்லை. பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் தங்களை கடத்தியவர்கள் மீது புகார் அளிப்பதில்லை. 2013-ல் அந்நாட்டு அரசு மணப்பெண் கடத்தலுக்கான தண்டனைகளை உயர்த்திய போதிலும், குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அதன் பின்னர் நிலைமை பெரும்பாலும் மாறாமல் உள்ளது.
பாலின சமத்துவ தன்னார்வ தொண்டு நிறுவனமான ஓபன் லைன் அறக்கட்டளையின் தலைவரான முனாரா பெக்னசரோவாவின் கூற்றுப்படி, “கிர்கிஸ்தானில் சிறுவர்கள் தாங்கள் எதை வேண்டுமானாலும் பெறலாம் என்று நம்பி வளர்க்கப்படுகிறார்கள். உள்நாட்டு அமைச்சகம், நீதிமன்றங்கள் மற்றும் பிற உத்தியோகபூர்வ அமைப்புகள் அனைத்தும் இதுபோன்ற ஒரே மாதிரியான சிந்தனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றன. இந்த நிலையை மாற்ற கல்வி மற்றும் சிவில் சட்டங்கள் தீவிரமாக செயல்பட வேண்டும்” என்று கூறினார். மணப்பெண் கடத்தல்களை இயல்பாக்கும் ஒரு கலாச்சாரத்தால் மற்றும் காவல்துறையின் அலட்சியம் இவைகளால் பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி உள்ளது.
மேலும் படிக்க | அரிசி 1 கிலோ ரூ. 448, பால் 1 லிட்டர் ரூ.263! ரத்த கண்ணீரில் இலங்கை…