ஆக்லாந்து: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய பெண்கள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறியது.
நியூசிலாந்தில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஆக்லாந்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.
மந்தமான ஆட்டம்
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (10), ஷபாலி (12) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பின் யஸ்திகா, கேப்டன் மிதாலி ராஜ் இணைந்தனர். அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டும் என்ற பெயரில் இருவரும் ‘டெஸ்ட்’ போல மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் எட்டினர். 3வது விக்கெட்டுக்கு 130 ரன் (154 பந்து) சேர்த்த போது யஸ்திகா (59 ரன், 83 பந்து) அவுட்டானார். மிதாலி 68 ரன்னில் (96 பந்து) வெளியேறினார். பின் வரிசையில் ஹர்மன்பிரீத் கவுர், பூஜா (34) வேகமாக ரன் சேர்த்தனர்.
இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன் எடுத்தது. ஹர்மன்பிரீத் கவுர் (57) அவுட்டாகாமல் இருந்தார்.
கேப்டன் அபாரம்
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ராட்செல் (43), அலிசா (72) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. எல்லீஸ் பெர்ரி 28 ரன் எடுத்தார். கேப்டன் மெக் லான்னிங் 97 ரன்னுக்கு அவுட்டானார். மழை காரணமாக இடையில் போட்டி தடை பட்ட போதும், ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 280/4 ரன் எடுத்து 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பேத் (30) அவுட்டாகாமல் இருந்தார்.
பங்கேற்ற 5 போட்டியிலும் வென்ற ஆஸ்திரேலியா 10 புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. 5 போட்டியில் பங்கேற்ற இந்தியா (2 வெற்றி) 3வது தோல்வியடைந்தது.
200
இந்திய ‘சீனியர்’ வேகப்பந்து வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி, 200 வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். மிதாலிக்குப் (229) பின் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது சர்வதேச வீராங்கனை ஆனார் ஜூலன். இங்கிலாந்தின் சார்லொட்டீ (191) 3வது இடத்தில் உள்ளார்.
Advertisement