கல்வியை காவிமயமாக மாற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேள்வியெழுப்பியுள்ளார்.
குஜராத்தில் பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், வெங்கய்ய நாயுடுவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்கம் மையத்தை வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பல நூறு ஆண்டுகளாக பிரிட்டன் ஆட்சியாளர்கள் உருவாக்கிய மெக்காலே கல்வி முறையை தான் நாம் பின்பற்றி வருகிறோம். இந்த கல்வி முறை நமக்கு என்ன கற்றுக் கொடுக்கிறது? நமது சொந்த கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் வெறுக்க செய்யும் பணியை தான் அது செய்து வருகிறது. ஒருகாலத்தில் உலகுக்கே கல்வியை கற்றுக் கொடுத்த நம்மை, ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை போல அது சித்தரிக்கிறது. சொந்த அடையாளத்தின் மீதான பெருமிதத்தை இழந்த ஒரு சமூகத்தால் எப்படி முன்னேற முடியும்? இதுதான் நம் தேசத்தின் வளர்ச்சி தாமதம் ஆவதற்கு முக்கிய காரணம் ஆகும். மெக்காலே முறையின் கீழ் வெளிநாட்டு மொழி ஒன்று இந்தியாவில் கல்வியை போதிக்கும் மொழியாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால், தரமான கல்வியை மேட்டுக்குடி மக்கள்தான் பெற முடியும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. இது, பெரும்பாலான மக்களின் கல்வி பெறும் உரிமையை தடுப்பதாக உள்ளது.
இந்த அவல நிலைமை இனிமேலாவது மாற வேண்டும். நமது பாரம்பரியம், கலாச்சாரம், முன்னோர்கள் மீது பெருமிதம் கொள்ள வேண்டும். காலம் காலமாக நம்மிடம் இருக்கும் அடிமை மனநிலையை தூக்கியெறிய வேண்டும். இதற்கு முதலில் மெக்காலே கல்வி முறையை நாம் முழுமையாக கைவிட வேண்டும். எதிர்வரும் 75-வது சுதந்திர தினத்திலாவது இது நடக்கும் என நம்புகிறேன். வெளிநாட்டு மொழி மீதான மோகத்தை ஒழித்து, நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், தாய் மொழியை தான் முதன்மையாக நினைக்க வேண்டும். நமது வேதங்களை பற்றி அறிந்துகொள்ள அனைவரும் சமஸ்கிருதத்தை கற்க வேண்டும். நமது புதிய கல்விக்கொள்கையில், தாய்மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கல்வியை காவிமயமாக்குவதாக நம் மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அப்படி செய்வதில் என்ன தவறு இருக்கிறது. நமது பழங்கால வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ‘வசுதெய்வ குடும்பம்’ (அனைவரும் ஒரே குடும்பம்) என்பதுதானே இன்றளவும் நமது வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது, கல்வியை இந்திய மயமாக்குவதில் தவறு இல்லை. ஒருகாலத்தில், பல உலக நாடுகளில் இருந்து நாதெள்ளா உள்ளிட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கல்வி கற்று சென்றனர் என்பதை நாம் மறக்கக் கூடாது. இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
