புதுடெல்லி: அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மலிவு விலை கச்சா எண்ணெய் விரைவில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது .
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவும் ஆயத்தம் ஆகி வருகிறது. முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கருத்து தெரிவிக்கையில் ‘‘உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யா மீதான அமெரிக்கத் தடைகளை மீறுவது இல்லை என்று தெளிவுபடுத்தும் அதே வேளையில் இது ரஷ்ய படையெடுப்பிற்கு ஆதரவாக இருக்கும்’’ என்று அவர் கூறினார்.
இதற்க பதிலளித்த இந்தியா, முறையான எரிசக்தி பரிவர்த்தனைகள் அரசியலாக்கப்படக் கூடாது என தெரிவித்தது. இந்தநிலையில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரஷ்யா மற்றும் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய எண்ணெய் நிறுவனத்துடனான கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம், சர்வதேச சந்தையில் தற்போது இந்தியாவுக்குக் கிடைக்கும். இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் உள்ளன. ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த தடையும் இல்லை என்று இந்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தியா தனது எரிசக்தித் தேவைகளில் 80 சதவீதத்திற்கும் மேலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதையே பெரிதும் நம்பியுள்ளது.