போபால்,
ஹோலி பண்டிகையை வடமாநிலங்களில் நேற்றைய தினம் பொதுமக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி விளையாடி மகிழ்ந்தனர். இருப்பினும் இந்த பண்டிகையின் போது, ஒரு சில இடங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களும் அரங்கேறியுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். அதே போல் ராஜஸ்தான் மாநிலம் பைகானீர் மாவட்டத்தில், இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 நபர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பங்காங்கா என்ற பகுதியில், கடந்த வியாழக்கிழமை இரவு, ‘ஹோலிகா தஹான்’ கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்போது கோபால் சோலங்கி என்ற நபர் கையில் கத்தியை வைத்துக் கொண்டு தனது நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் அனைவரும் மது போதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் கோபால் சோலங்கி எதிர்பாராத விதமாக தன் கையில் இருந்த கத்தியால் தனது உடலில் குத்திக் கொண்டார். இதில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரது நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.