சிறு தொழில்களை பாதுகாத்திட டிஜிட்டல் வர்த்தகத்தில் திறந்தவெளி கட்டமைப்பு வேண்டும்; பியூஷ் கோயல்

புதுடெல்லி,
டிஜிட்டல் வர்த்தகத்துக்கான திறந்தவெளி கட்டமைப்பு(நெட்வொர்க்) மூலம் மின்னணு வர்த்தகத்தை(இ-காமர்ஸ்) ஜனநாயகப்படுத்தலாம் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை, நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதன்மூலம் சிறு, குறு தொழில்களுக்கு சம வாய்ப்பு அளித்து சிறு வணிகத்தை பாதுகாக்க இது உதவும். மேலும், சிறு தொழில்களை பாதுகாக்க இது வழி செய்யும் என்றார். 
பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் ஏற்பாடு 
செய்திருந்த 5-ஆவது வருடாந்திர தொழில் முனைவோர் மாநாட்டில், இன்று காணொலிக் காட்சி வாயிலாக மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டின் புதிய கண்டுபிடிப்பு இயந்திரமாக “ஸ்டார்ட் அப்(தொடக்க நிலை) நிறுவனங்கள்”  திகழ்கின்றன. 
ஜனவரி 16, 2016 அன்று ஸ்டார்ட்அப் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு, கடந்த ஆறு ஆண்டுகளில், இந்தியா வேகமாக முன்னேறியுள்ளது. உலகில் நாம் மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட நாடாக இருக்கிறோம்.
விவசாய தொழில்முனைவோர் மற்றும் ஜவுளித் தொழில்முனைவோர்களை அதிகம் முன்னிருத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கிறது. இதற்காக அதிகமான தொழில் முனைவோர்கள் உருவாக வேண்டும், வெவ்வேறு பிரிவுகளில் வர வேண்டும்.
தொழில்முனைவோர்கள்,  வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் புதுமைகளை உருவாக்க வேண்டும். அவர்கள் நிலைத்தன்மையான மற்றும் வட்டப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். 
தொழில்முனைவோராக வேண்டுமெனில் இடர்பாடுகளை எதிர்கொள்பவர்களாகவும் மற்றும் மாற்றங்களை சந்தித்தாக வேண்டும்.
இந்தியாவில்  “டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு” கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும். இது இந்தியாவில் அடுத்த டிரில்லியன்9ஒரு லட்சம் கோடி) டாலர் நிறுவனங்களை உருவாக்க உதவும்.இன்று உலகின் பல நாடுகள் இந்தியாவிடமிருந்து கற்று வருகின்றன.
தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் ஏற்றுமதி, 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு இந்தாண்டு அல்லது அடுத்த ஆண்டில் உருவெடுக்கும். இதை டிரில்லியன்(ஒரு லட்சம் கோடி) டாலர் தொழிலாக மாற்றுவதே நம்முடைய இலக்கு.
இவ்வாறு அவர் உரையாற்றினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.