விவசாயிகளை வியாபாரிகளாக மாற்ற, இடைத்தரகர்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இல்லாத வேளாண்மை நிதிநிலை அறிக்கை என்று, பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2022-2023 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில் இயற்கை விவசாயம் ட்ரோன் மூலமாக மருந்துகள் தெளித்தல். மண்பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்களையே பிரதிபலிக்கிறது.
இதில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நின்று அது பாராளுமன்றத்தில் திரும்ப பெற்றபோது, அதை பாராட்டிப் பேசிய முதல்வர் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை மாற்றுவதற்கு, இடைத்தரகர்களற்ற விற்பனைக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எவ்வித திட்டத்தையும் வைக்கவில்லை.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஒதுக்கப்பட்ட நிதி ரூ.4 கோடி என்பது யானைப்பசிக்கு சோளப்பொறி.
மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் கொட்டிக்கிடக்கும் நெல்லைக் கொள்முதல் செய்து, பாதுகாக்க, கட்டமைப்பை மேம்படுத்த எவ்வித அறிவிப்பும் இல்லை.
திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதிக்கு எவ்வித பதிலும் இல்லை. பனைவிதை நடவு, இயற்கை உர உற்பத்தி, தார் பாய்கள், தோட்டக்கலை செடி தொகுப்பு உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட திட்டங்கள், ஒதுக்கப்பட்ட நிதிகள் போன்றவை திமுகவினரும், இடைத்தரகர்களும் பயன்பெறவே உதவும். இதனால் விவசாயிகளுக்கு பயனில்லை.
வேளாண்மை நிதிநிலை அறிக்கை படிப்பதற்கு பரவசம் ஊட்டினாலும் இது வேதிமருந்து அடிக்கப்பட்ட காய்கறி போன்று விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.9,368 கோடி என்பது ஏமாற்றமளிக்கிறது.
மொத்தத்தில் 60 ஆண்டுகால விவசாயிகளின் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணாத வெற்று நிதிநிலை அறிக்கை” என்று ஜி கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.