உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 24ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் தலைநகரான கீவை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை முழுமையாக கைப்பற்ற தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, கீவ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு கட்டிடங்கள் உள்ளிட்டவை மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் உள்ளிட்ட 220க்கும் மேற்பட்டோர் கீவ் நகரில் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 900 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கீவ் நகருக்கு வெளியே ரஷ்ய படைகள் கைப்பற்றிய 30க்கும் மேற்பட்ட இடங்களை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல், மெலிடோபோல் நகரை தங்களது கட்டுப்பாட்டிற்குள் ரஷ்ய ராணுவம் கொண்டுவந்துள்ள நிலையில், அதனை மீட்க உக்ரைன் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலின் புறநகர் பகுதிகளை சுற்றிவளைத்துள்ள ரஷ்யா, தாங்கள் நகரின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக அறிவித்துள்ளது. அங்கு அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய இரும்பாலைகளில் ஒன்றான அசோவ்ஸ்டல் இரும்பாலையை ரஷ்ய படைகள் தாக்கி அழித்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்ட உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, போரின்போது ஏற்பட்ட இழப்புகளில் இருந்து ரஷ்யா மீண்டு வர பல தலைமுறைகள் ஆகும் என்றார். மேலும், தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நகரங்களுக்கு வரும் மனிதாபிமான உதவிகளை ரஷ்ய படைகள் தடுத்து நிறுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.