முட்புதரில் வீசப்பட்ட பிறந்த குழந்தை! மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது சிக்கிய தாய்

சேலம் அருகே ஓடும் ரயிலில் பிறந்த ஆண் குழந்தையை புதரில் வீசி சென்ற தாயை ஓமலூர் போலீசார் கண்டுபிடித்து தாயிடமே குழந்தையை ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில்வே நிலையம் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியில் ரயில்வே தண்டவாள ஓரத்தில் ஆழகான ஆண் குழந்தைக் கிடந்தது. இந்த குழந்தையை மீட்ட ஓமலூர் போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். குழந்தையை ஓமலூர் அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர்.
இந்தநிலையில், குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குழந்தையின் தாயை போலீசார் கண்டறிந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மகள் ஜோஸ் ராணி. ரெயிலில் சென்றபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, அவருடைய அக்கா இஸ்மாலா தங்கராணி, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஜோஸ் ராணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆனது தெரிய வந்ததை தொடர்ந்து சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். அப்போது, ஜோஸ் ராணி மயக்க நிலையில் இருந்தார். இதனால், அவருடைய அக்கா இஸ்மாலா தங்கராணியிடம் போலீசார் விசாரித்தனர்.
image
அப்போது, ”எனது தங்கை ஜோஸ் ராணிக்கு திருமணம் ஆகவில்லை. கயத்தாறில் இருந்து பெங்களூருவுக்கு ரெயிலில் சென்றபோது, நிறைமாத கர்ப்பிணியான தங்கைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, ஓடும் ரெயிலில் குழந்தை பிறந்த நிலையில், சிக்னலுக்காக ரயில் நின்றதால், குழந்தையை ஓமலூர் அருகே புதரில் வீசிச் சென்றேன்” என்று அவர் ஒப்பு கொண்டார்.
மேலும் அவர், ஜோஸ்ராணிக்கு உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறினார். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த ஆண் குழந்தையை, அதன் தாய் ஜோஸ் ராணியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.