பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் (வயது 20), தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துவருகிறார்.
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், நடப்பு சாம்பியனான லீக் ஜி ஜியாவுடன் (மலேசியா) மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை லக்சயா சென் 21-13 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் பதிலடி கொடுத்த மலேசிய வீரர், அந்த செட்டை 21-12 என கைப்பற்றினார். இதனால் வெற்றியை உறுதி செய்யும் மூன்றாம் செட் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இறுதியில் லக்சயா சென் 21-19 என அந்த செட்டை கைப்பற்றி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன்மூலம் ஆல் இங்கிலாந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை லக்சயா சென் பெற்றார்.
இதற்கு முன்பு பிரகாஷ் படுகோனே, கோபிசந்த் இருவரும் ஆல் இங்கிலாந்து போட்டியில் பட்டம் வென்றுள்ளனர். சாய்னா நேவால் 2015ல் இறுதிப்போட்டி வரை முன்னேறி, இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.