செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதிப்பது என்ற இலங்கை மத்திய வங்கியினது தீர்மானத்தின் விளைவாக, செலாவணி வீதமானது, வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு மட்டத்தினை விஞ்சுகின்றதொரு மட்டத்தினை தற்போது அடைந்துள்ளமையினைக் காணமுடிகிறது.
இதற்கமைய, நடைமுறை செலாவணி வீதம், வெளிநாட்டு வேலையாட்களின் வெளிநாட்டுச் செலாவணி பணவனுப்பல்களின் மீதும் ஏற்றுமதியாளர்களின் தேறிய வருவாய் மீதான உயர்ந்த ரூபா பெறுமதியின் மீதும் உயர்ந்த வருமானத்தினை வழங்குகிறது. அண்மைய இந்நிகழ்வுகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களுக்காகவும் ஏற்றுமதியாளர்களின் தேறிய வருவாய்களுக்காகவுமான மேலதிக ஊக்குவிப்புக்களுக்கான உத்தேச திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில்லை எனத் தீர்மானித்திருக்கிறது.
வெளிநாட்டுச் செலாவணி வீதத்தில் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க மேல் நோக்கிய சீராக்கத்தின் காரணமாக, பிந்திய அலுவல்சார் தரவுகளின்படி, வெளிநாட்டு வேலையாட்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் முறைசார்ந்த வழிப்படுத்தல்கள் ஊடான வெளிநாட்டுச் செலாவணியின் மாற்றல்கள், 2022 மாச்சு மாத காலத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்களை ஏற்கனவே காட்டியுள்ளன.