மதுரை: இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதற்கு முத்தரையர் சமுதாயத்தினர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து துணை நிற்கின்றனர் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்தார்.
மதுரை ஆனையூரில் இன்று (சனிக்கிழமை) பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிகேணி எம்எல்ஏவுமான உதயநிதி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “சிலையை திறக்க வந்த எனக்கு மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்துள்ளீர்கள். தமிழக வரலாற்றில் புகழ்மிக்க பேரரசர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். இவர் சந்தித்த 12 போர்களில் ஒன்றில் கூட தோற்காமல் தொடர்ந்து வெற்றி கண்டவர். அவரது சிலையை முதல்வர் சார்பில் உங்கள் பிரதிநிதியாக திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன்.
நான் இளைஞரணி செயலாளர் பொறுப்பேற்பதற்கு முன்பே மதுரையில் அமைச்சர் மூர்த்தி 2017-ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் பொற்கிழி வழங்கும் விழாவை நடத்திக்காட்டினார். இதன் பின்னரே இளைஞரணி செயலாளராக 2019ல் நான் பொறுப்பேற்றேன். என்னுடைய அரசியல் வளர்ச்சியில் மதுரையின் பங்கு முக்கியமானது.
தமிழகம் மக்கள் எம்பி தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என தொடர் வெற்றியை திமுகவிற்கு அளித்துள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் சிலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்திருந்தோம். அதை தற்போது நிறைவேற்றியுள்ளோம். இந்த சிலையை பல ஆண்டுக்கு முன்பே இங்கு திறந்திருக்க வேண்டும். ஆனால் அதிமுக சதித்திட்டம் தீட்டி திறக்கவிடாமல் செய்துவிட்டது.
தற்போது மூர்த்தியின் தீவிர முயற்சியால் சிலை திறக்கப்பட்டு முத்தரையர் சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மூர்த்தியிடம் எந்த பொறுப்பை வழங்கினாலும் சிறப்பாக செய்துமுடிப்பார். அவரிடம் அளிக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவுத்துறை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.12,700 கோடி வருவாய் ஈட்டி சாதித்துள்ளது. மூர்த்தியிடம் எந்த பொறுப்பை கொடுத்தாலும் அதை சிறப்பாக நிறைவேற்றுவார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதற்கு முத்தரையர் சமுதாயத்தினர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து துணை நிற்கின்றனர். இதற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த விழாவிற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முத்தரையர் சமூகத்தினர் ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.