கரீபியன் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி, உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பால் படணத்தை பாதியில் ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெலிஸில் அமைந்துள்ள இந்தியன் க்ரீக் கிராமத்திற்கு ஹெலிகொப்டரில் சென்ற இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதிக்கே உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், பிரித்தானிய அரச குடும்பமானது காலனித்துவத்தின் நினைவுச்சின்னம் எனவும் கொந்தளித்துள்ளனர்.
பஹாமாஸ் மற்றும் ஜமைக்காவில் பெலிஸ் பகுதியில் உள்ள கொக்கோ பண்ணையை சுற்றிப்பார்க்க பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி திட்டமிட்டிருந்துள்ளது.
இதன் போதே உள்ளூர் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது எங்கள் நாடு, அரச குடும்பத்து வாரீசுகளுக்கு இங்கே இடமில்லை எனவும், எங்கள் மண்ணில் கால் பதிக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் மக்கள் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி இந்தியன் க்ரீக் கிராமத்திற்கு செல்லாமல் பயணத்தை பாதியில் கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பிரித்தானிய அரச குடும்பத்தை அவமானப்படுத்தும் செயல் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் தலைவர்களிடம் கலந்தாலோசிக்காமல், அவர்களின் மன நிலை தெரிந்து கொள்ளாமல் பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியின் பயண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் இந்தியன் க்ரீக் கிராமத்தின் தலைவர் செபாஸ்டியன் ஷோல் தெரிவிக்கையில்,
அவர்கள் எங்கள் மண்ணில் கால் பதிப்பதை நாங்கள் விரும்பவில்லை, அதுதான் நாங்கள் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு அனுப்ப விரும்பும் செய்தி.
கரீபியன் தீவுகளில் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் தரையிறங்க முடியும், ஆனால் எங்கள் நிலத்தில் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளூர் மக்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பொலிசார் அனுமதி மறுத்துள்ளதாகவும், ஆனால் பொதுமக்கள் பதாகை ஏந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 1000 பேர்கள் மட்டுமே குடியிருக்கும் இந்தியன் க்ரீக் கிராமத்தில் செயல்பட்டு வரும் Flora and Fauna International என்ற நிறுவனத்திற்கு எதிராக நிலம் தொடர்பில் உள்ளூர் மக்கள் போராடி வருகின்றனர்.
குறித்த தொண்டு நிறுவனத்திற்கு கடந்த 2020 முதல் இளவரசர் வில்லியம் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.