லண்டன்:’ஈஷா அறக்கட்டளை’ நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ், மண் வளம் காக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை லண்டனில் துவக்கினார்.
உலகளவில் மண் வளம் மாசுபடுவதை தடுக்கும் விழிப்புணர்வு பிரசார பயணத்தை ஈஷா அறக்கட்டளை துவக்கியுள்ளது.இத்திட்டத்தின் கீழ், சத்குரு ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இருந்து, மோட்டார் சைக்கிள் வாயிலாக 100 நாட்களில், 26 நாடுகளுக்கு பயணித்து, ஜூன் 21ல் சர்வதேச யோகா தினத்தன்று காவிரி படுகை வந்தடைய உள்ளார்.
இந்நிலையில், லண்டனில் மண் வள விழிப்புணர்வு பயணத்தை துவக்கி வைத்து சத்குரு பேசியதாவது:பூமியின் மண் வளம் பாதிப்படைந்து வருகிறது. இது, உணவு தானிய உற்பத்தி, பருவ நிலையின் சமநிலை ஆகியவற்றை பாதிக்கும். இந்த பூமியின் முக்கிய அங்கமாக மண் வளம் உள்ளது. வாழ்வுக்கான அடித்தளம் மண் வளம் தான்.
பிரதமர் மோடி, மண் வளம் காப்பதிலும், மண் வளத்தை மேம்படுத்துவதிலும் இதயபூர்வமான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே மண் வளம் காக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மிகச் சிறந்த திருப்புமுனை திட்டமாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
மண் வளம் விழிப்புணர்வு பயணத்தில் ஆம்ஸ்டர்டாம், பெர்லின்,பாரீஸ், ஜெனீவா, டெல் அவிவ் உள்ளிட்ட பல நகரங்களில் முக்கிய பிரசார நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இந்த பிரசாரம், 350 கோடி மக்களை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement