வாஷிங்டன்-”ரஷ்யாவுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கி உதவினால், அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என சீன அதிபருடனான கலந்துரையாடலின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. எனினும், நம் அண்டை நாடான சீனா, ரஷ்யாவுக்கு மறைமுகமாக உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.இச்சூழலில், நேற்று முன்தினம், சீன அதிபர் ஷீ ஜிங்பிங்குடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக கலந்துரையாடினார்.
இதுகுறித்து, வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இடையில், இரண்டு மணி நேரம் நடந்த கலந்துரையாடலில், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில், அமெரிக்காவின் நிலை குறித்து விளக்கிய ஜோ பைடன், போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். பேச்சின் போது, ‘சீனா, ரஷ்யாவுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கி உதவினால், அதற்கான பின் விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும்’ என, சீன அதிபரை ஜோ பைடன் நேரடியாகவே எச்சரித்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement