மயிலாடுதுறை அருகே குடிநீரில் ஓ.என்.ஜி.சி.யில் இருந்து எண்ணெய் கலந்து வருவதால், 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்று போக்கு, மயக்கம் ஏற்பட்டு, 2 குழந்தைகள் உட்பட 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில், ஓஎன்ஜிசி எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிணறில் இருந்து எடுக்கப்படும் வாயு மற்றும் எண்ணெய் இங்கு சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சேமிப்பு கிடங்கிற்கு எதிரே ராமாமிர்தம் தெரு உள்ளது.
இந்தத்தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு என கடந்த 3 வருடங்களுக்கு முன்பு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீரில், கடுமையான காவி படிந்து இருப்பதாகவும், மேலும் கடந்த ஒருவாரமாக எண்ணெயும் கலந்து வருவதால், இப்பகுதியில் உள்ள குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு அதிக அளவில் தோல்அரிப்பு ஏற்படுவதாகவும், மேலும் இந்த தண்ணீரை பருகுவதால் வாந்தி, வயிற்றுப் போக்கு அதிக அளவில் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள 15-க்கும் மேற்பட்டோர் குத்தாலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இதில் 6 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு தோலில் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்றும், இந்த ஓ.என்.ஜி.சி. எண்ணெய் சேமிப்பு கிடங்கு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து குத்தாலம் வட்டாட்சியர் பிரான்ஸ்வா ஆய்வு மேற்கொண்டார். குடிநீரில் ஓஎன்ஜிசி எண்ணெய் கலப்பதாக பொது மக்கள் புகாரை அடுத்து குடிநீர் மாதிரிகள் கொண்டு சென்று ஆய்வுக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ்வா தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM